மெய்யருள் வியப்பு – 30
1 ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே
மாறாக் கருணை என்மேல் வைக்க வந்ததென்னையோ
மதியிலேன் நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ ( பாடல் 18 )
ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே – சுழிமுனை நாடியில் உள்ளேயும் மேலேயும் வேகமாக தன் உணர்வு பாய்ந்த அனுபவம் பற்றிக் கூறுகின்றார்
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே – தூக்கம் மற்றும் இதர அவஸ்தைகளால் தன் உணர்வு கீழே இறங்கா வண்ணம் அருள் உதவியது என்று கூறுகிறார்
மாறாக் கருணை என்மேல் வைக்க வந்ததென்னையோ – அருள் தன் மீது கருணை மழை பொழிந்தது பற்றி வியந்து போகின்றார் வள்ளல் பெருமான்
மதியிலேன் நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ – இந்த அருள் கிடைக்க தான் முன்னர் செய்த தவம் தான் காரணம் என்று கூறுகின்றார்
( தற்கால சன்மார்க்கத்தவர்கள் கவனிக்க : ஜீவகாருண்யம் என்று கூறிக்கொண்டு வெறும் சோறு மட்டும் போட்டுக்கொண்டிருக்கவில்லை வள்ளல் பெருமான் , கூடவே தவமும் செய்தார் )
திரண்ட கருத்து :
அருள் தனக்கு எவ்வாறெல்லாம் உதவி செய்தது பற்றி வியந்து பாடி – அது தன் உணர்வு கீழே இறங்காமல் பார்துக் கொண்டது முதல் , அது தனக்கு செய்த உதவிகளை எண்ணி வியந்து போகின்றார் – அதற்கு தான் முன்னர் செய்த தவம் தான் காரணம் என்கிறார்
வெங்கடேஷ்