சிவஞான போதம் – Book intro
அருளியவர் – மெய்கண்டார்
காலம்: 13 ஆம் நூற்றாண்டு.
திருக்குறளை விட சிவஞான போதம் மிகவும் சுருங்கியது.
அதன் சுருக்கம் வருமாறு:
சூத்திரம்(நூற்பா): 12
வரிகள்: 40
சொற்கள்: 216
எழுத்துக்கள்: 624
624 எழுத்துக்களிலேயே எல்லாக்கருத்துக்களையும் செறிவாகக் கூறிய ஒரு நூல் உலகிலேயே இது ஒன்றுதான் என்று கூறலாம்.
12 நூற்பாக்களை உடையது இந்நூல்.
முதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் கொண்டு காணப்படாத கடவுளின் இருப்பை உணர்த்துகிறார் ஆசிரியர்.
நூற்பாவின் முற்பகுதி, இவ்வுலகைத் தோற்றுவித்து நடத்தும்
🎯முதற் கடவுள்
உண்டு🎯என்பதைப் பொது வகையால் நிறுவும். பிற்பகுதி, அம்முதற் கடவுள் முற்றழிப்பைச் செய்பவனாய் உள்ள சிவபெருமானேயன்றிப் பிறர் அல்லர் எனச் சிறப்பு வகையால் நிலை நாட்டும்.
இனி, நூற்பாவை நோக்குவோம்.
நூற்பா 1)
❗️அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.❗️.
நூற்பாவின் பொருள்:
இவ்வுலகம் ஒரு தொகுதிப் பொருள். ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பவற்றின் கூட்டமே உலகம். எனவே, அது பல பகுதிகள் கூடி அமைந்தது என்பது விளங்கும். மேலும், நம் அறிவினால் சுட்டி அறியப்படுவதாகவும் உள்ளது.
இவ்வாறு பகதிகளை உடையதாயும், சுட்டியறியப்படுவதாயும் இருத்தலால், இவ்வுலகம் தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய முத் தொழில்களை உடையது என்பது விளங்கும்.
அறிவற்றதாகிய உலகம் தானே தோன்றி நின்று அழியும் என்றல் பொருந்தாது. அதனை தோற்றுவித்து நடத்துவதற்கு ஒரு பேரறிவாளன் இருத்தல் வேண்டும்.
இவ்வுலகம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு ஒடுங்கியிருந்தது. முன்பு அதனை அவ்வாறு ஒடுங்குமாறு செய்தவனே மீள அதனைத் தோற்றுவிப்பவனும் ஆவான்.
எனவே ஒடுக்கத்தைச் செய்பவனாகிய அழித்தற் கடவுளே உலகிற் முதற் கடவுள் ஆவான் என்றும், ஏனையோர் முதல்வர் அல்லர் என்றும் ஆராய்ச்சியில் தேர்ந்தோர் கூறுவர்
வெங்கடேஷ்
courtesy : குரு ஷண்முகம்