நாயைப் பார்த்து ஞானம் பெற முடியுமா ?

நாயைப் பார்த்து ஞானம் பெற முடியுமா ?

ஜென்கதை….

ஒரு ஜென் குரு தனது சீடர்களுடன் நீராட நதிக்குச் சென்றார். நன்றாக நீராடி வெளியில் வந்ததும், சீடர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

“குரு, தன்னிலை உணர நான் என்ன செய்ய வேண்டும்..?” என்று கேட்டான் சீடன். “அந்த நாயிடம் கற்றுக்கொள்..” என்று சொல்லிவிட்டு, குரு நடந்தார்.

சீடனுக்குப் பெரும் வருத்தம். தன் கேள்வியை அவர் அலட்சியப்படுத்திவிட்டார் என்று உள்ளுக்குள் ஆதங்கம். “குருவே, இந்த நாயிடம் நான் என்ன கற்க முடியும்..?” குரு, சற்று நேரம் எதுவும் சொல்லாமல் நடந்துகொண்டே இருந்தார்.

“அந்த நாயிடம் கற்க எனக்கு விருப்பமில்லை. சொல்லுங்கள் குரு..!” என்று சீடன் அவரைத் துளைத்தான். குரு, அடுத்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த இன்னொரு நாயைக் காட்டினார். “அப்படியானால், இந்த நாயிடம் கற்றுக்கொள்..!”

“நீங்கள் என்னை கேலி செய்கிறீர்கள், குருவே..!.ஒரு நாயிடம் என்ன கற்க முடியும்? அது சாப்பிடுகிறது.. தூங்குகிறது.. இனப்பெருக்கம் செய்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதானே உங்களைத் தேடி வந்தேன்..”

“நீயும் சாப்பிடு.. தூங்கு..” என்று சொல்லிவிட்டு, குரு தன் குடிலுக்குள் போய்விட்டார். சீடன் திகைத்து நின்றான்.

*விளக்கம்:*

இன்றைக்கு சராசரி மனிதன் என்ன செய்கிறான்..? சாப்பிடுகிறான்.. ஆனால், அதைச் சாப்பிடுவதில் சேர்க்க முடியாது. தூங்குகிறான்.. ஆனால், அதைத் தூக்கத்தில் சேர்க்க முடியாது. ஏன்..? சாப்பிடும்போது, அவன் முழுமையாக அதில் கவனம் பதிப்பதில்லை.

மிகவும் ருசியானதைச் சாப்பிட்டால்கூட, முதல் கவளம் வரைதான் அவனுக்கு அந்த ருசி தெரிந்திருக்கிறது. அதற்குப் பின், மனம் வேறெங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க, உணவு அதன்பாட்டுக்கு வாய்க்குள் செலுத்தப்பட்டு, உணவுக் குழாய் மூலமாக வயிற்றைச் சென்று சேர்கிறது. என்னுடைய அனுபவத்தில் நேர்ந்த ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

இருபது வயதிருக்கும். உண்ண அமர்ந்தேன். ஒரு கவளம் உணவை எடுத்து வாய்க்குள் போட்டேன். திடீரென்று உள்ளே என் உடல் மண்டலமே வெடிப்பது போல் உணர்ந்தேன். இது புத்திபூர்வமாக நான் கவனித்தது அல்ல. அனுபவபூர்வமாக உணர்ந்தது.

இத்தனை நேரம் தட்டில் இருந்த ஏதோ ஒன்று எனக்குள் சென்றதும், நானாகவே மாறும் அதிசயத்தை ஆழமாக உணர்ந்த உணர்வு அது. இது ஏதோ ஒரு சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு கணத்திலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு கவளம் உணவோ, ஒரு கனியோ, ஒரு காயோ, எதை நீங்கள் உண்டாலும், இதுவரை நீங்களாக இல்லாமல் இருந்த அது, நீங்களாக மாறிப் போகிறது.

காமத்தை விடவும் இது பேரனுபவம் இல்லையா..? யோகா என்பதே இதுதானே..? நீங்கள் அல்லாத ஒன்றுடன் நீங்கள் இயைந்து ஒன்றாவதுதானே யோகா..? இந்த அனுபவத்தை உணர்வதற்காகத்தானே மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்..!

நாம் யோகா என்று பேசும்போது, இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றிப்போவதைப் பேசுகிறோம். ஒரு கவள உணவுடன்கூட ஒன்றிப்போக முடியாத உங்களால் இந்த பிரமாண்டத்துடன் எப்படி ஒன்றிப் போக முடியும்..? இந்த பூமியின் மிகச் சிறிய பகுதியாக இருந்த ஒன்று, உங்களுக்குள் சென்று நீங்களாகவே மாறுகிறதே, இதைவிட பேரதிசயம் வேறென்ன வேண்டும்..?

இன்னொரு அதிசயம் தூக்கம். நீங்கள் ஆழ்ந்து உறங்கும்போது, அங்கே நீங்கள் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறு அங்கமாக மாறிப் போகிறீர்கள். ஆனால், உண்மையில் உங்கள் அனுபவத்தில் இப்போது என்ன நடக்கிறது..? உங்களில் பெரும்பாலானவர்கள், ஆழ்ந்த உறக்கத்துக்குப் போவதேயில்லை.

தூங்குவதாக நினைக்கும் போதுதான் மண்டைக்குள் லட்சக்கணக்கான நடவடிக்கைகள், நடமாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கனவுகளாகவும், பிதற்றல்களாகவும் இவை வெளிப்படுவதை விஞ்ஞானம் பதிவு செய்கிறது.

சாப்பிடும்போது வீட்டை நினைப்பது, வீட்டில் இருக்கும்போது வேலையை நினைப்பது, வேலையில் இருக்கும்போது, போக்குவரத்தை நினைப்பது, பயணம் செய்யும்போது, இரவைப் பற்றி சிந்திப்பது, தூங்கப் போகும்போது, வேறெதிலோ கவனத்தைச் செலுத்துவது என்றே உங்கள் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது.

நம் உயிர் என்பதை முழுமையாக உணர வேண்டும் என்றால், செய்வதை முழு ஈடுபாட்டுடன், நூறு சதவிகித அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். சதா சிந்தனைகளில் சிக்கிப் போனதால், சிந்தனைகளும், உணர்ச்சிகளும்தான் வாழ்க்கை என்று மாறிப்போய்விட்டது. கோபம், ஆத்திரம், மகிழ்ச்சி, திருப்தி, இந்த உணர்ச்சிகளெல்லாம் உங்கள் மனதால் உருவாக்கப்படுபவை.

உயிரின் உண்மையான உணர்வுகளே உங்களுக்கு மரத்துப் போய்விட்டன. பதஞ்சலி, யோகாவைப் பற்றி சொன்ன வாக்கியம் என்ன தெரியுமா..? ‘சித்த விருத்தி நிரோதா.’ அதாவது, மனதை வைத்துக்கொண்டு, காண்பதை, கேட்பதை, பார்ப்பதை, உணர்வதை, திருகித் திருத்தங்கள் செய்யாமல் இருந்தால் அதுவே யோகா. ஆதியோகி என்று நாம் குறிப்பிடும் ஷிவா, மூன்று கண்களைக் கொண்டிருந்தார் என்கிறோம். மூன்றாவது கண் என்பது என்னவோ நெற்றியில் முளைத்த இன்னொரு விழி என்று தவறாக அர்த்தம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது.

அப்படியல்ல, இருப்பதை இருக்கும்படியே பார்க்கும் அந்தப் பரிமாணத்தை, அந்தக் கண்கொண்டு பார்க்கிறார் என்பதை விளக்குவதற்காகவே அப்படிச் சொல்லப்பட்டது. எப்போது ஒன்றைச் செய்யும்போது, அதனுடன் முழுமையாக இருக்கிறீர்களோ, அப்போதுதான் உயிருடன் நீங்கள் தொடர்பு வைத்திருக்கிறீர்கள்.

சாப்பிடும்போது, பிரபஞ்சம் உங்களோடு ஐக்கியம் ஆகிறது. தூங்கும்போது, நீங்கள் பிரபஞ்சத்தோடு ஐக்கியம் ஆகிறீர்கள். இதை நூறு சதவிகித ஈடுபாட்டோடு செய்தால், மேன்மையான நிலைக்குப் போவதற்கான கதவுகள் தாமாகவே திறக்கும். இந்தக் கணம் என்பதுதான் வாழ்வின் நிதர்சனமான உண்மை. சென்ற கணம், அடுத்த கணம், என்பவை நம் அனுபவத்தில் இல்லாதவை, கற்பனையானவை.

எதைச் செய்கிறீர்களோ, அதைச் செய்கின்ற இந்த ஒரு கணத்தில், அதில் நூறு சதவிகிதம் முழுமையான ஈடுபாட்டோடு இருந்து பாருங்கள். படைப்பைப் பற்றியோ, படைத்தவனைப் பற்றியோ, முழுமையாக உணர வேண்டும் என்றால், அது இந்தக் கணத்தில் மட்டுமே சாத்தியம். ஆனால், இந்தக் கணத்தில் பெரும்பாலும் நீங்கள் வேறேதோ பிரமையில் சிக்கிப்போகிறீர்கள். இந்தப் பிரபஞ்சத்தை மாயை என்று குறிப்பிடுவது, ஒரு தத்துவமாக அதனுடைய குணத்தைச் சொல்வதற்காக அல்ல. அதை நீங்கள் பார்க்கும் விதத்தைக் குறிப்பிடுவதற்காகவே சொல்லப்பட்டது.

இருப்பதை இருக்கும் விதத்திலேயே பார்க்க முடியாமல், அதை இப்படியும், அப்படியுமாக மாற்றி உங்கள் மனது ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகிறது. உங்களுடைய பிரபஞ்சத்தை நீங்கள் உணரும் அந்த அனுபவம் உங்களைப் பொறுத்தவரை ஒரு பிரமையாக, ஒரு மாயையாகத்தான் இருக்கிறது.

‘நாயைப் போல் இரு..’ என்று சொன்னால், உண்ணும்போது முழுமையாக, அதிலேயே ஒவ்வொரு கவளத்தையும், ஒவ்வொரு துளியையும் ரசித்து, அது உள்ளே போய் என்ன ஆகிறது என்ற உணர்வுடன் உண்ணுங்கள்..!

உறங்கும்போது, இந்த உலகத்தையே நீங்கள் சுமப்பதாக நினைத்துக்கொள்ளாமல், சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, முழுமையாக உறங்கச் செல்லுங்கள்..!

இதைத்தான் அந்த ஜென் குரு, சீடனுக்குச் சொன்னார்.

 பகிர்வு
வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s