*புலால் மறுத்தல்*
ஒருவன் தான் மாமிசமே சாப்பிடுவதில்லை என்கிறான். “*ஏன் மாமிசம் சாப்பிடுவதில்லை*” என்று அவனைக்கேட்டால் அவன் உடனே கொஞ்சமும் தயங்காமல் “*நான் சைவம்*” என்கிறான். மாமிசம் சாப்பிடாமைக்கும் சைவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அவனைத் திருப்பிக்கொண்டு கேட்டால், “*என்ன அப்படிக் கேட்கிறீர்கள், மாமிசம் சாப்பிடாமலிருப்பது தானே சைவம்*” என்கிறான். இந்த எண்ணமே ஏறக்குறைய எல்லார் மனதிலும் பரவிப் பதிந்து விட்டது.
காய்கறி தின்றால்தான் சைவம் தன்னுடைய உடலில் தங்கும் – ஆனால் ஆட்டுக்கறி கோழிக்கறி தன்நாவில் பட்டாலே சைவம் ஓடிவிடும் என்று நினைக்கிறானே. இவன் தேகத்திலுள்ள கறியை விடவா இன்னொரு கறி மட்டமானது? இவன் கழித்துப் போட்டதைத் தான் ஆடுமாடு தின்கிறது. ஆனால் அவற்றின் சாணம் கையில் தொடுகிற அளவுக்குச் சுத்தமாக இருக்கிறது. இவன் எல்லா நறுமணமும் பொருந்திய அறுசுவை ஆகாரத்தை உள்ளே தள்ளுகிறான். ஆனால் அது உள்ளே போனதும் அண்டளிக்க முடியாத கொடிய நாற்றமாக மாறிவிடுகிறது. இப்படி நல்லதையும் கெட்டதாக மாற்றுகிற இவன் உடலில் உள்ள மாமிசத்தையே சகித்துக்கொண்டு இருக்கக் கூடிய அந்தச் சைவம் மற்றப் பிராணிகளின் மாமிசத்தைக் கண்டா ஓடிவிடும்?
இப்படி மண்டையைக் குடைகிற கேள்வியைக் கேட்போமென்று அவன் எதிர்பார்த் திருப்பானா? பாவம்! அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. உடனே திருவள்ளுவ நாயனாரைச் சாட்சிக்கு இழுக்கிறான்.
*”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”*
என்ற பாட்டை எடுத்துக் கொள்ளுகிறான். “*அந்தப் பாட்டிற்கு என்னய்யா அர்த்தம் என்று கேட்டால், அதுதான் மிருகங்களைக் கொல்லாதவனையும், அவற்றின் மாமிசத்தை உண்ணாதவனையும் எறும்பு முதல் யானை வரையுள்ள எல்லா ஜீவ ராசிகளும் கை கூப்பித் தொழும் என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிடுகிறான். இப்படியே அர்த்தம் சொல்லிச் சொல்லித்தான் அவனுக்குப் பழக்கம். அதையே இங்கு வந்தும் விட்டோட்டுகிறான். ஆனால் இங்கே கிளம்புகிறது அவன் வியாக்கியானத்தைத் தவிடு பொடியாக்குகின்ற அறிவுப் பாணம்.
“*கொல்லான்*” என்றால் ஆடுமாடுகளைக் கொல்லாதவன் என்கிறானே, அப்போ ஆடுமாடுகளைக் கொல்லாமல் தன்னுயிரைக் கொன்றால் பாதக மில்லையா? இவன் ஒவ்வொரு விநாடியும் தான் வயதாகிய மூச்சை வெட்டித் தள்ளுகிறானே, தன்னுயிரைத் தானே பறித்தெறிந்து பாழாக்குகிறானே, இவனா கொல்லாதவன்? இந்தத் தற்கொலைப் பாதகத்தைதான் சைவம் என்கிறானா? இன்னொரு கூட்டத்தான் தன்னை ஜைனன், திகாம்பரன் என்று சொல்லிக்கொள்வான். பெண்டு பிள்ளைகள் பார்த்தால் காரித் துப்புவார்களே என்று கூட நினையாமல் ஆடையின்றித் திரிவான் – கையிலே மயில்பீலி வைத்துக்கொண்டு பாதையில் கூட்டித் தள்ளிக்கொண்டே போவான். “*என்னடா இது*” என்றால் அகிம்சை என்பான். அப்படி செய்யாவிட்டால் ஈ எறும்பு மிதிப்பட்டுச் செத்துப் போகுமாம். அதைத் தடுக்கத்தான் இந்த அகிம்சா மூர்த்தி இப்படி அம்மணமாகத் திரிகிறான் போலிருக்கிறது. துணி கட்ட வேண்டும் என்று நினைக்கக் கூட அவனுக்கு நேரமில்லை. அப்படி ஒரேடியாக அகிம்சையிலே இறங்கி விட்டான். அகிம்சை என்பது மானங்கெட்ட தாகவா சூடு சொரணையற்றதாகவா இருக்கும்? மான வெட்கமே இல்லாதவனுக்கா ஞானம் வரும்? இதையெல்லாம் பார்த்துத்தான் நம் ஆதிமெய் உதய பூரண வேதாந்தத்திலே ஒரு பாட்டுச்சொல்லி வைத்திருக்கிறோம்.
*”நம்பிய தன்னுயிர் தற்கொலை செய்வான்*
*நமசிவ இருப்பறியான்*
*தம்பிரான் றவசிதி காம்பர னென்பான்*
*சைவனெ னச்சொல்வான்*
இப்படி தன்னுயிருக்கே காருண்யம் செய்யாது தற்கொலை செய்பவன் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுகிறான். தன்னைத் தட்டிக்கேட்க ஆளில்லை என்றுதானே இப்படி அவன் நாவு நீளுகிறது ? இந்த லட்சணத்தில் புலால் மறுத்தலுக்கு வேறே வியாக்கியானம் செய்ய வந்து விடுகிறான். *”புலாலைத் தொடாமலிருந்தால் புண்ணியம் வந்து விடும் என்று நினைக்கிறானே. இவன் மீதே புலால் இருக்கிறதே அதற்கென்ன செய்வான்?*” திரு வள்ளுவ நாயனார் புலால் மறுத்தானை என்று திட்டமாகவும் நேராகவும் சொல்லியிருக்க, இவன் புலால் உண்ணாதவனை என்று கோணலாக மாற்றி அர்த்தம் சொல்லுகிறான். இந்த அர்த்தம்தான் சரியென்றால் அவர்கள் *புலால் புசியானை* என்றே பாடியிருப்பார்களே!
இவனுடைய தூல தேகமாகிய புலால் இருக்கிறதே, அதன் மீது இவன் வைக்கிற இச்சைதான் இவனைக் கடைசியில் சாய்த்து நரகலாக்கிச் சாவு என்ற மீளாத் துன்பத்தில் கொண்டுபோய்த் தள்ளுகிறது. அதனால்தான் *”மாமிச இச்சை மரணம்”* என்று வேதம் கூறுகிறது. இங்கே *புலால் என்பது இவன் உடலாகிய மாமிசத்தையே குறிக்கும்*. அதை வளர்க்கத்தான் இவன் வெறிகொண்டு திரிகிறான். இவன் பாடெல்லாம் அதற்குத்தான். இவன் பருப்பும் நெய்யுமாகத் திணித்தால் தான் என்ன – கறியும் மீனுமாக வயிற்றில் கொட்டினால் தான் என்ன – இரண்டுமே ஊன உடலாசை வெறிதான். எந்த உணவை உண்டாலும் இந்த உடலிச்சைகளும் அதன் சேட்டைகளும் ஓய்ந்து போகாது. இவனையே சாய்த்த பிறகுதான் அவை ஓயும். ஆகவே தான் *இந்த உடலாகிய புலாலை வெறுக்க வேண்டும் என்று சொன்னால் போதாது என்று மறுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்*. மறுத்தல் என்றால் அறவே வேண்டாமென்று வெறுத்து விட்டுவிடுவதல்ல – ஏனெனில் இந்த அழிதேகத்தை விட்டால் இவனுக்கு வேறு கதியில்லை. இவனால் அது முடியவும் முடியாது.
*புலாலில்லாத ஒரு தேகத்தை, தன்னுள்ளேயே இருக்கும் அந்த மகாப் பரிசுத்த சைவ தேகத்தைப் பெற்றபின் அல்லவா இந்தப் புலால் தேகத்தை இவனால் மறுக்க முடியும்? புலாலில்லாத இந்தப் பேரின்ப தேகத்தை இவன் அறிந்தானா? இல்லை – அதை அறிந்த பிறகல்லவா இவன் புலால் மறுத்தலைப் பற்றிப் பேச வேண்டும்?* தன் மூடப்படிப்பாலே தன் குட்டை அறிவாலே, அந்த மதி வல்லாரின் மறை மொழியை இவன் எட்டி அளந்து பார்க்கிற லட்சணம் இது – பாவம்! கடைசியில் இப்படி அவமானமுற நேருகிறது.
*”எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்*” என்பதற்கு இவன் பண்ணுகிற அர்த்தத்தைப் பார்க்கும் போது, *”இவனுடைய படிப்பு நிச்சயமாக மூடப்படிப்பே தான்”* என்று அது முத்திரை போட்டுவிடுகிறது. மாமிசம் சாப்பிடாதவனை ஆடு மாடு கோழி முதலிய அஃறினைக் கூட்டங்கள் கைகூப்பித் தொழும் என்பது தான் அவன் பண்ணும் அர்த்தம். இது எங்கேயாவது நடக்குமா? ஏனெனில் அவைகளுக்குத் தொழுகின்ற அறிவுமில்லை, தொழுவதற்குரிய கையுமில்லை. அப்படியிருக்க அவை எப்படி ஐயா தொழும்? அதிலும் *புலாலுண்ணாதவரைத்தான் தொழவேண்டும் மென்றும், இன்னார்தான் புலால் உண்ணாதவர் என்றும் அவற்றிக்கு எந்தக் காலத்தில் தெரியப் போகிறது?* இப்படி நேராகச் சிந்தித்துப் பார்க்காமல் எதை எதையோ அறிவுக்குப் பொருந்தாததை யெல்லாம் பேசுவது சைவம் என்று சொல்லித் திரிகிறார்களே – இவர்கள் எப்போது மெய்யின்பால் திரும்பிப் பலன் பெறப் போகிறார்கள் என்று எமக்கு விசனமாயிருக்கிறது.
—- *_மெய்வழி சாலை ஆண்டவர்கள்_*.