திருநல்லூர்பெருமணத் தலத்து சிவாலயத்தில் பக்தர்கள் பெரும்கூட்டமாய்த் திரண்டிருந்தனர்.
ஏனெனில் அன்றைய தினம் திருஞானசம்பந்தரின் திருமணம் திருவருளால் நடைபெற இருந்தது. அனைவரும் ஞானசம்பந்தப் பெருமானை தரிசிக்கவென்றே வந்தவர்கள்.
வளரிளம் பருவத்து கம்பீரமும் குழந்தமை கொஞ்சும் அமைதியும் ஒரு சேரத் திகழ்ந்தது அவரது திருமுகம்.
நாடெங்கும் நடந்து நடந்து, பல திருத்தலங்களிலும் பதிகங்கள் பாடி, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய பிள்ளை, தங்கள் ஊருக்கு வந்தது குறித்து திருநல்லூர் மக்கள் மகிழ்ந்திருந்தனர்.
திருஞானசம்பந்தர் மட்டுமா, கூடவே, நாயன்மார்களான, திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் மூவரும் சம்பந்தரோடு கூடி வந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
திருநீலநக்கர் வேதியர் குலத்தில் பிறந்தவர். வேத மூர்த்தியை அறிந்துகொண்ட பின்பு சடங்குகளை விட்டு சிவபெருமான் திருவடியில் சரண்புகுந்தவர். சிவபக்தியில் அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். அப்படிப்பட்ட இருவரும் கூடி ஞானசம்பந்தரின் திருமண வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்தனர். திருநீலநக்கரே வேதியராகி, திருமணத்துக்கான வேள்வித் தீயை மூட்டினார். ஞானசம்பந்தரும் அன்னை தோத்திர பூர்ணாம்பிகையும் மணமக்களாய் அமர்ந்திருப்பதைக் காண, முருகனும் தெய்வானையும் அமர்ந்திருப்பதைப் போலவும், அந்த தெய்வத்திருமணத்திற்கு, தான் வேள்வித் திருப்பணி செய்யும் பாக்கியம் பெற்றதையும் எண்ணி மகிழ்ந்தவராக இருந்தார்.
திருநீலகண்ட யாழ்ப்பாணரோ, ஞான சம்பந்தப் பெருமானின் பாடல்களுக்கு யாழ் இசைப்பதையே தன் பெரும்பேறு என்று நினைத்து சம்பந்தரோடு இணைந்து பாடிக்கொண்டிருந்தார். இறைவனே அவர் இசைக்கு மயங்கிப் பொற்பலகையிட்ட பெருமைகளையெல்லாம் எண்ணாது, அடியார்க்கு அடியாராய் நின்று அருள் சுரக்க யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.
முருகநாயனாரின் பணி எப்போதும் மாலைகள் தொடுப்பது. கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் ஆகிய மாலை வகைகளைத் தொடுத்து இறைவனுக்கு சாத்தித் திருப்பணி செய்து வந்த முருக நாயனாரோ, இன்று ஞானசம்பந்தருக்கும், தோத்திர பூர்ணாம்பிகைக்கும் நிகழ இருக்கும் திருமண வைபவத்திற்கு, பார்த்துப் பார்த்து அழகுற மாலைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார்.
ஊரும் உறவும் போற்ற, கூடியிருந்த அடியார்கள் எல்லாம் `நமசிவாய’ என்று ஐந்தெழுத்து மந்திரத்தை முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும், ஞானசம்பந்தப் பெருமான் அங்கிருந்தோர் மத்தியில் பேசினார். அவர் பேச்சின் பொருள், `சிவபெருமானை அடைவதுவே உண்மையான திருமண வைபவம். அதை அனைவரும் பெற வேண்டும்’ என்பதாகவே இருந்தது. பேசி முடித்ததும் பதிகம் பாட ஆரம்பித்தார்.
`பல பதிகளிலும் சென்று பதிகங்கள் பாடிய சம்பந்தரின் கடைசிப் பதிகம் அது’ என்பதை அங்கிருந்தவர்களில் அநேகர் அறிந்திருக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்த நாயன்மார்கள் அறிந்திருந்தனர். `காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி…’ என்று அவர் பாடப் பாடக் கேட்டோர் அனைவர் மனமும் இறைவன்மேல் காதலுற்று உருகலாயிற்று. `வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே’ என்று அவர் பாட, அதைக் கேட்டு அம்மை இறங்கி வந்தாள். பால் கொடுத்துத் தான் தொடங்கிவைத்த ஞானப் பயணத்தின் பந்தத்தை திருநீறு கொடுத்து முடித்து வைக்க தரிசனம் கொடுத்தாள். அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டவர்கள் அனைவரும் அவளை நெருங்க, அனைவருக்கும் அன்னை திருநீறு அளித்து பிறவி வினையறுத்தாள். பந்த பாசத்தில் கட்டுண்டு கிடந்தவர்கள், அவளைக் கண்டு அஞ்சி, அங்கிருந்து விலகி ஓடினர்.
திருநீறினை இட்டுக்கொண்டதும், அங்கு இறைவன் ஜோதி ரூபமாய் பிரசன்னமானார். ஞானசம்பந்தர் தன்னோடு நின்ற அத்தனை அடியார்களையும் கைகூப்பி, சிவஜோதியில் கலக்க அழைத்தார். ஆண்டவரின் ஆனந்தத் திருக்கோலத்தைக் கண்ட அனைவரும், அவரோடு ஜோதியில் கலக்கத் தயாராயினர்.
திருஞானசம்பந்தர் தோத்திர பூர்ணாம்பிகையின் கைகளைப் பற்றிக்கொண்டு ‘நமசிவாய வாழ்க’ என்று குரலெடுத்துத் துதித்தார். அடியார் அனைவரும் மறுகுரலில் ஐந்தெழுத்தை ஒலிக்க கயிலாயமே அதில் அதிர்ந்தது. முதலில் நாயன்மார் நால்வரும், தம் மனைவியரோடு ஜோதியில் புகுந்து கலந்தனர். பின் அவரடியார் அனைவரும் தயக்கமின்றிக் கலந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற்றனர்.
பகிர்வு